நீங்கள் அழைக்கும் நபர் பதிலளிக்கவில்லை. நீங்கள் காத்திருக்கலாம் அல்லது சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யலாம்?

இந்த வார்த்தைகள் தினம் ஒரு முறையாவது நம் காதுகளுக்கு கேட்டு விடுகிறது.  அழைப்புகள் நிராகரிக்கப்படும்போது மீண்டும்  முயற்சி செய்து பார்க்கிறோம். தொழில்நுட்பங்கள்  எவ்வளவு பெரிய மாற்றங்களை நம் வாழ்கை முறையில் ஏற்படுத்தி இருக்கிறது என்பது சொல்லிலடங்காதது.

நம் கைகளில் தொலைபேசிகள் இல்லாத காலம் என்று வைத்துக்கொள்வோம். மிக முக்கிய விஷயமாக ஒருவரிடம் பேச வேண்டும் என்றால் சிரத்தை எடுத்து அந்த நபரை நேரில் சென்று சந்திக்கிறோம். அப்படி பார்த்து பேச முற்படும்போது அந்த நபர் உங்களுக்கு பதிலளிக்கவில்லை எனில் எத்தனை கோபத்துடன் அங்கிருந்து வெளிவருவோம். அந்த நபருக்கும் நமக்குமான உறவு முறிந்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சமகாலத்தில் அழைப்பை ஏற்காத பட்சத்தில் காத்திருக்கிறோம் அல்லது மீண்டும் முயற்சி செய்கிறோம். இதை இரண்டு விதமாக அணுக  வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அழைப்பை ஏற்காதவன் ஏதோ வேலையாக இருக்க கூடும்  அல்லது கவனிக்காமல் இருந்திருக்கலாம்  என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள் மனிதனின் நாகரீக வளர்ச்சியை காட்டுகிறதா அல்லது தொழில்நுட்பங்கள் நம் உணர்வுகளை இன்னும் சுருக்கி விட்டதா. சரி தவறு என்கிற முடிவுகளுக்குள் வராமல் போகிற போக்கில் யாவையும் நாம் கடந்து விடுகிறோம் அல்லது அதனுடன் வாழ பழகிக்கொள்கிறோம்.

டிஜிட்டல் கேமராக்கள் இல்லாத நாட்களில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்திருப்போம். படிய தலைவாரி முகத்திற்கு பவுடர் போட்டு கேமரா முன் நின்று எப்படி சிரிப்பது என்று தெரியாமல் சிரித்து போட்டோ எடுத்த பின் வீட்டிற்கு வந்து, அடுத்த இரண்டு நாட்கள் கழித்து போட்டோ வாங்க செல்லும் முன் போட்டோவில் நாம் எப்படி இருப்போம் என்று பல கனவுகள் வந்து போகும். நிழற்படங்கள் அத்தனை பெரிய சந்தோஷத்தை நமக்கு கொடுத்திருக்கிறது. அந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் கொடுத்த அனுபவத்தை இன்றைய நவீன கேமராக்கள் தருவதில்லையே. உடனடி போட்டோ ஏன் அத்தனை பெரிய சந்தோஷத்தை கொடுக்கவில்லை. instant-களாக மாறி போன  சமூகத்தில் போட்டோக்களுக்கு கூட யாரும் சிரிப்பதில்லை.

தொழில்நுட்பங்கள் எதை கொடுத்திருக்கிறது என்று வாதாடும் சமயத்தில் எதை நம்மிடத்தில் இருந்து எடுத்திருக்கிறது என்று மறந்துவிட்டோம். கூட்டமாக வாழ்ந்த சமூகம் தனி தனி கூடுகளாக மாறி போனதற்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் சம்மந்தம் இல்லாமல் இல்லை. யானை போன்று பெரிய காதுகளுடன் இருந்த மனித இனம் இன்று சிறிய காதுகளாக மாறி போனதற்கு பெயர் பரிணாம வளர்ச்சி அல்ல தொழில்நுட்ப கோளாறு. தொலைபேசிகள் நம் கேட்க்கும் திறனை மழுங்கடித்திருக்கிறது. பெரிய காதுகள் தேவைபடாமல் போய்விட்டது. இன்னும் சில நூறு ஆண்டுகள் கழித்து பரிணாம வளர்ச்சி என்கிற பெயரில் மனிதனின் காதுகள் இன்னமும் சிறியதாகும். அன்றைய மாணவர்களுக்கு முன்னோர்கள் என்று நம்முடைய புகைப்படங்களை காட்ட நேரிடும், எவ்வளவு பெரிய காது, மூக்கு, கண் என்று நம்மை பார்த்து கேலி செய்யப்படும். 

இது நிச்சயம் சரி செய்ய வேண்டிய விஷயம் இல்லை. வளர்ச்சி என்கிற பெயரில் மனிதன் மழுங்கடிக்கப்பட்டு கொண்டிருக்கிறான். காலம் அப்படி தான் நம்மை கடத்திக்கொண்டு போகும். நாமும் உண்டு வாழ்ந்து இறந்து விடுவோம். அதுவரை தொழில்நுட்பங்கள் நம்மை பயன்படுத்தாமல் நாம் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோமாக. இரண்டிற்கும் என்ன வித்தியாசங்கள் என்று கேட்ப்பின்  பிள்ளையாருக்கும் கணபதிக்கும்மான வித்தியாசம் தான் அது.

by ஜேஷ்..

Share this article on