ஆகஸ்ட் 15, 2020. இரவு 7.29 மணியிலிருந்து நான் ஒய்வு பெற்றதாக எடுத்துகொள்ளுங்கள் என்று அறிவிக்கிறார் மஹேந்திர சிங் தோனி, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்  தலைவன் எவ்வழியோ நானும் அவ்வழியே என்று தன் ஒய்வு குறித்து அறிவிக்கிறார் சுரேஷ் ரெய்னா. ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

சமூக ஊடகங்களில் செய்தி தீயாகிறது, வருத்தங்கள் தெரிவிக்கபடுகிறது, வாழ்த்துகள் பரிமாறப்படுகிறது. DP-கள் தோனி ரெய்னா முகங்களால் நிரம்புகிறது, status-ல் train விட ஆரம்பிக்கிறார்கள் ரசிகர்கள் , ஆனால் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒய்வு அறிவித்துவிட்டு அமைதியாகிறார்கள் இருவரும். இது தான் தோனி ரெய்னா. சமுத்திரகனி சசிகுமாருக்கு பின் இருக்கும் சமகால நட்பின் அடையாளம்.

தோனி மிக பெரிய ஆளுமை என்பதில்  எந்த சந்தேகமும் இல்லை , அவர் இன்னும் பிரம்மாண்டமாக ரசிகர்கள் முன்னிலையில் விடைபெற்றிருக்க வேண்டும் எல்லாம் சரி. ஆனால் ரெய்னா.

இந்திய கிரிக்கெட் அணியில் அதிகம் கொண்டாடபடாத, அதிகம் கவனிக்கப்படாத வீரன்.. சுயநலமில்லாமல் அணியின் வெற்றிக்காக போராடும் வீரன். சக வீரனின் வெற்றியை தன் வெற்றியாக பாவிக்கும் வீரன்.

தோனியின் செல்ல பிள்ளை என்ற பெயரும் ரெய்னாவிற்கு உண்டு, பல முறை அதை உறுதியும் படுத்தியிருக்கிறார் ரெய்னா. அதற்காக ரெய்னா நல்ல கிரிக்கெட்டர் இல்லை என்று கிடையாது. பல நல்ல இன்னிங்ஸ் ஆடியிருக்கிறார் ரெய்னா. தோனி ரெய்னா இருவரும் இணைந்து பல நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வெற்றி தேடி தந்துள்ளனர். தோனி ரெய்னா களத்தில் இருக்கும் வரை வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே ரசிகர்கள் நினைப்பதுண்டு.

2011 உலககோப்பை இந்திய அணி வென்றதில் மிக முக்கிய பங்கு ரெய்னாவிற்கு உண்டு.. அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர்  கேரி கிறிஸ்டன், கால் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும்  அரை இறுதியில் பாகிஸ்தானிற்க்கு எதிராகவும்  ரெய்னா ஆடிய இன்னிங்ஸ் தான் இந்திய அணி உலககோப்பை வெல்ல காரணம் என்று கூறியிருப்பார். அவ்வளவு முக்கியமான இன்னிங்ஸ் அது.

T20, ஒரு நாள் ,டெஸ்ட் கிரிக்கெட் என அணைத்து வகை போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தான். ஆனால் இந்திய கிரிக்கெட்  இவரை கொண்டாட தவறிவிட்டது. ஆனால் ரசிகர்கள் தவறவில்லை.

தோனியை போலவே ரெய்னாவும் கொண்டாடப்பட வேண்டிய வீரன். தோனி ஏற்று கொண்டால் வழியனுப்பும் போட்டி நடத்த தயார் என்று சொன்ன பிசிசிஐ அந்த போட்டியில் ரெய்னாவையும் சேர்த்து ஆட வைக்க வேண்டும் என்றே கேட்க தோன்றுகிறது. ரெய்னா பார்ம் அவுட் ஆகி இருந்த பல சமயங்களில் திரும்பவும் அணிக்குள் அழைத்து பார்ம் திரும்ப பெற உதவிய தோனி ரெய்னாவின் தலைவனாக இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

தல, சின்ன தல என்று புனை பெயர் வழங்கும் அளவிற்கு ரசிகர்களின் அன்பை பெற்றவர்கள் இருவரும். வர போகும் IPL-ல் இருவரும் இணைந்து ஆடுவதை பார்க்க ஆவலோட காத்திருக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.

DHONI AND RAINA – AN EMOTION

by ஜேஷ்…

Share this article on